ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவினால் பதிவு செய்யப்பட்டதாக வெளியாகியிருக்கும் சர்ச்சைக்குரிய குரல் பதிவுகள் தொடர்பில் 10 பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் குரல் பதிவுகளும் இதில் உள்ளடங்கியிருப்பதால் விசாரணையின் பின்னரே ஒரு முடிவை எடுக்க முடியும் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவினால் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய தொலைபேசி கலந்துரையாடல் பதிவுகள் வெளியாகி அரசியல் மட்டத்திலும் நீதித்துறை மட்டத்திலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
கொழும்பு மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பத்மனி ரணவக்கவும் இன்றைய தினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் அளித்திருப்பதோடு மேலும் பலரிடமும் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், கொழும்பிலிருந்து செயற்படுகின்ற சிங்கள பத்திரிகை மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் ஆசிரியர்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்றைய தினம் முற்பகல் சந்தித்தார்.
இந்த சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெற்றதோடு அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ச, வெளியாகி சர்ச்சையை கிளப்பியிருக்கும் குரல் பதிவுகள் குறித்து 10 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை நடத்திவருவதாகத் தெரிவித்தார்.
'தற்போதுங்கூட குரல் பதிவுகளை விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவுக்குப் பாரப்படுத்தப்பட்டுள்ளது. நீதிபதிக்கு தொலைபேசியில் அழைத்து குறிப்பிட்ட நபரை தூக்கு மேடைக்கு ஏற்றுமாறு கூறுவார்களாயின் உத்தரவிட்டவரையும், அப்படி சொன்னவரையுமே முதலில் தூக்கு மேடையில் ஏற்ற வேண்டும். அவ்வாறு செய்வதுவும் இன்னுமொரு கொலை செய்வதற்குச் சமமாகும். எந்த குற்ற உணர்வும் இல்லாமல் நீதித்துறை மீது கைவைத்திருக்கின்றனர். இது மிகவும் பாரதூரமானது. விசாரணையொன்று நடக்கிறது. அதன் பிரதிபலனையே பார்க்கமுடியும். இன்னும் எத்தனை நீதிபதிகள் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது தெரியவில்லை. 10 பொலிஸ் குழுக்கள் இதுகுறித்த விசாரணைகளை நடத்திவருகின்றன – என்று தெரிவித்தார்.
இதேவேளை இங்கு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, சர்ச்சைக்குரிய குரல் பதிவில் தன்னை கொலை செய்ய முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவும் திட்டமிட்டமை குறித்து பதிவாகியிருப்பதால் ரணில் விக்கிரமசிங்கவிடம் விரைவில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை இன்றைய தினமும் வலியுறுத்தினார்.
'முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க ஆகியோருக்கெதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறையிட்டிருக்கின்றேன். அந்த முறைப்பாட்டில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் குறிப்பிட்ட திகதியில் அலரிமாளிகையில் சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர், சட்டம் ஒழுங்கு அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி.பெரேரா, ரஞ்ஜன் ராமநாயக்க உள்ளிட்டவர்கள் கலந்தாலோசித்தமை, அந்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து முன்னாள் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச கூறிய விடயங்கள் என்பவற்றையும் வழங்கியிருக்கின்றேன். இது ரஞ்ஜன் ராமநாயக்க மாத்திரம் செய்த துணிகரச் செயல் அல்ல. இது முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஒட்டுமொத்த எதிரணியினரையும் அடக்கியாள்வதற்கு செய்த திட்டமாகும். முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர், எதிர்கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒடுக்குவதற்கான திட்டமே அதில் இருந்தது. இத்திட்டத்தில் ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவும் ஈடுபட்டிருக்கின்றார். எனவே இதுகுறித்து முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக அவர் அழைக்கப்படுவார் என எதிர்பார்க்கின்றேன்” எனத் தெரிவித்தார்.
ரணில்-மைத்திரி தலைமையிலான கடந்த நல்லாட்சி அரசின் காலத்தில் ராஜபக்ச குடும்பத்தினரையும் படையினரையும் தண்டிப்பதற்காக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க உள்ளிட்டோர் தலைமையிலான நிறைவேற்றுக்குழு கூடி பேச்சு நடத்தியதாக இங்கு உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்தன இதன்போது சுட்டிக்காட்டினார்.
'நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டு அமைச்சரவை நியமிக்கப்பட்ட பின், நிறைவேற்றுக் குழு என ஒன்று அமைக்கப்பட்டது. அதில் முன்னாள் பிரதமர், ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க, கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன உத்தியோகபூர்வமாக கூடி ராஜபக்சவினரையும், படையினரையும் தண்டிப்பதற்கு திட்டங்களை வகுத்துவந்தனர். அது உத்தியோகபூர்வ அரசாங்கத்தின் பொறிமுறையாகவே அணுகப்பட்டது. அந்த நிறைவேற்றுக் குழுவானது அமைச்சரவையை விடயும் அதிக பலம் கொண்டதாக அமைச்சரவைக்கு மேலே செயற்பட்டது. 100 நாள் வேலைத்திட்டத்தின் காலத்தில் செயற்பட்ட அந்த நிறைவேற்றுக் குழுவில் இருந்த ஜே.வி.பியினரும் இப்போது நல்லாட்சியின் பங்குதாரராக இல்லை என்பதையே கூறுவார்கள்” என்றார்.
Lanka Newsweek © 2026